யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்களோ, ஊழியர்களோ, மாணவர்களோ குற்றம் செய்தவர்கள் அல்லர். அப்படி அவர்கள் குற்றம் ஏதும் செய்திருந்தால் உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியதே உரியவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இதனை விடுத்து அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாதவாகள் என்ற போர்வையில் நடந்து கொள்வது வேதனையானதும் வெறுக்கத்தக்கதும் ஆகும். – இப்படித் தெரிவித்திருக்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க உப தலைவர் கலாநிதி அ. திருக்குமரன்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் ஊழியர்கள் மாணவர்களுக்கு எதிராக விடுக்கப்படும் இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தலைக் கண்டித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதியான கண்டன ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தினுள் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறியவை வருமாறு:-
ஏற்னவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இத்தகைய இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்கள். இத்தகைய ஒரு நிலைமையை மீண்டும் உருவாக்கி, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு விரட்டி, பல் கலைக்கழகத்தை மூடச்செய்வதே இத்தகையவர்களின் நோக்கமாக நாம் எண்ணவேண்டியுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் சட்டத்திற்கு புறம்பாக எத்தகைய குற்றச் செயல்களையும் செய்யாதபோது இத்தகைய இனந்தெரியாதவர்கள் என்ற போர்வையில் எம் மீது அச்சுறுத்தல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.