போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது.
சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார். அவர், தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அவரை கைதுசெய்துள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர், தன்னடைய உண்மையான கடவுச்சீட்டில், போலியான விஸாவை ஒட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
சந்தேகநபர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த முகவர் ஒருவருக்கு 1 இலட்சத்து 20ஆயிரம் ரூபாயை வழங்குவதாக உறுதியளித்ததன் பின்னரே, இந்த போலி விஸா ஒட்டப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
இத்தாலியில் இருக்கின்ற இந்திய பிரஜையொருவரின் கடையில் பணியாற்றும் நோக்கிலேயே அவர், இத்தாலிக்கு செல்லவிருந்தார் என்று தெரிவித்த அதிகாரிகள், அவரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.