வழக்கு விசாரணைகளிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்!

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதுதொடர்பான செய்திகள் ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுத்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை அந்தக் கட்சி மீறிவிட்டதாக ஆணைக்குழுவால் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்நிலையில் ஆலய வளாகத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதித்த ஆலயக் குருக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கினார்.

அதனை தொடர்ந்து தேர்தல்களுக்குப் பொறுப்பான காவல்துறைப் பிரிவினரால் தெல்லிப்பளைக் காவல்துறையினர் ஊடாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு தேர்தல் விதிமுறை தொடர்பில் உரிய கட்டளையை வழங்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு குருக்கள் இன்று அழைக்கப்பட்டார்.

அதனடிப்படையில் நீதிமன்றின் அறிவுரை குருக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. அத்துடன் இந்தக் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணைகளிலிருந்தும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்.

Related Posts