குருந்தூர்மலை வழக்கை முல்லைத்தீவு நீதிபதியிடமிருந்து மாற்றுங்கள்!!

குருந்துர் மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் மூக்குடைபட்ட பௌத்த இனவாதிகள், தற்போது முல்லைத்தீவு நீதவானை குறிவைத்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதவானுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் நேற்று (21) எழுத்துமூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம், அங்கு கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்கை, முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா தவிர்ந்து வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவானின் நடவடிக்கையினால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளதாகவும், இனவாத, மத, பிரிவினைவாத மோதல்கள் தோன்றுவதற்கு அது அனுமதித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா வழங்கிய உத்தரவுகளை ஆராய்ந்தபோது அவை பக்கச்சார்பானவை என உணரப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும், நீதித்துறையின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குருந்தூர் விகாரை ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை அவரின் பாரபட்சத்தை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் எனவும், பொங்கல் பண்டிகையை நடத்த 18ஆம் திகதி தமிழ் மக்கள் வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், பொலிசார் இது தொடர்பில் நீதிமன்றில் அறிவித்து மோதலை தவிர்க்க தீர்மானம் எடுத்தனர்.மோதலை தவிர்க்க பொலிசார் முயற்சித்தும், நீதவான் அதற்கான உத்தரவை வழங்கவில்லையென்றும், அந்த முடிவுகளினால் பெரும் முரண்பாடு ஏற்பட்டிருக்கும் எனவும், இவ்வாறான தீர்மானங்களினால் நீதித்துறைக்கு அவமரியாதை ஏற்படும் எனவும், அது பெரிய இனவாத, மத மோதலுக்கு வழி வகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் தவறான தகவல்கள் புனையப்பட்டுள்ளதுடன், சிங்கள அடிப்படைவாத மனநிலையை பிரதிபலிக்கும் கடிதமென்பதால் நீதிச்சேவை ஆணைக்குழு அதில் கவனமெடுக்க வாய்ப்பில்லையென நம்பப்படுகிறது.

Related Posts