குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

kurunagar_houseயாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் வாழும் 160 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

1986ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடு முழுவழுவதிலும் தொடர்மாடி வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் 160 வீடுகள் கொண்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.

கடந்த கால யுத்தத்தின் போது இவ்வீடமைப்புத் திட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் அற்று வீடுகளும் அதனை அண்டியுள்ள 8 கட்டிடங்களும் முற்றாக சேதமுற்று காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இவ்வீடமைப்புத் திட்டத்தினை யாழ்ப்பாணத்துக்கு சென்று நேரடியாக அமைச்சர் விமல் வீரவன்ச பார்வையிட்டார். அச்சமயத்தில் இவ்வீடமைப்புத் திட்டத்தில் வாழும் மக்களும் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வீடமைப்புத் திட்டத்தினை மீள நிர்மாணிக்கும்படியும் 9 மாத காலத்திற்குள் நிர்மாணப் பணிகளை முடிக்கும்படியும் இதன்போது அமைச்சருடன் அங்கு சென்றிருந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் காலக்கெடு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மீள்நிர்மாணத்திற்காக 85 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிறிவு கணக்கிட்டுள்ளது. 8 கட்டிடங்களையும் மீள் நிர்மாணிக்கவென 63.56 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்திக்கு 4.18 மில்லியன் ரூபாவும் ஏனைய மழைநீர் கழிவு நீர் சனசமுக நிலையம் ஆகியவற்றுக்கும் 8 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக அமைச்சுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தினை 9 மாத காலத்திற்குள் முடிப்பதற்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தீர்மாதித்திருந்தது.

இந்நிலையில் குருநகர் தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் கீழ் வாழும் மக்களாள் இவ்வீடமைப்புத் திட்டத்தினை நவீனமயப்படுத்த்தும் திட்டத்தினை துரிதப்படுத்தி வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும் இத்திட்டத்தில் வாழும் மக்களுக்கும் வீடுகளைப் பகிர்ந்தளிக்குமாறும் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts