குருணாகலுக்கும் பரவுகிறது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை!

குருணாகல் மாவட்டத்தில், நேற்றிரவு, இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வரத்தக நிலையம் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

mosque-attak-kokkarella

பன்னல இப்பாகமுவ நகரத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றை மூடுமாறு சிலர் எச்சரித்து விட்டு, தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்றிரவு சுமார் 7.30 அளவில் வந்த மூவர், கடையை மூடுமாறு அச்சுறுத்திய பின்னர், கடையில் இருந்த கண்ணாடிப் பெட்டியை தேசப்படுத்தி விட்டுச் சென்றதாக குறித்த கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ – பன்னல பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேறகொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களை அடுத்து பள்ளிவாசலில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அச்சமின்றி அனைவரும் வீடுகளுக்குச் செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலினால், பள்ளிவாசலின் ஜன்னல், கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, குருநாகல் – கொக்கரெல்ல பிரதேசத்திலுள்ள பள்ளி வாசல் மீதும் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் நேற்றிரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தின்போது குறித்த பள்ளிவாசலின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் இந்தத் தாக்குதலை அடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் பாதுகாப்புப் பணிகளில் 30க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Posts