குரங்கம்மையால் இந்தியாவில் முதல் மரணம்!!

இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு முதல் மரணம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கேரள மாநில சுகாதாரத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அண்மையில் அவர், அருகிலிருந்த கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மரணித்துள்ளார்.
அவரது உடல் குரங்கு அம்மை பாதிப்பாளர்களின் மரணம் தொடர்பான நிலையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தத் தகவலை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்-ம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குரங்கம்மைககு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான். ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது 4ஆவது உயிரிழப்பாகும்.

குரங்கம்மை பாதிப்பு வேகமாக பரவவில்லை, உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts