கும்கி -2 படத்தில் நடிக்க மறுத்த லட்சுமி மேனன்

தற்போது தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் மிரட்டு படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்த பணிகள் முடிய சில மாதங்களாகுமாம். எனவே கோடை விடுமுறைக்குத்தான் மிரட்டு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

laksmi-menon

மிரட்டு படத்தை அடுத்து கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பிரபுசாலமன். லிங்குசாமி தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி, இமான் இசையமைப்பில் இப்படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டாகின.

தற்போது, கும்கி 2ஆம் பாகத்துக்கான கதையை தயாராக வைத்திருக்கிறார் பிரபுசாலமன். கும்கி படத்தை விட பிரம்மாண்டமான படமாக எடுக்க எண்ணி இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறாராம் பிரபுசாலமன். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் இருவருக்கும் கும்கி படம்தான் முதல் படம். தற்போது முன்னணி நட்சத்திரங்களாகிவிட்ட அவர்களையே இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார் பிரபுசாலமன். லட்சுமிமேனனிடம் இது பற்றி பேசியபோது, அவர் கும்கி – 2 படத்தில் நடிக்க விருப்பமில்லை என்பதை நாசூக்காக சொல்லி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts