அங்கம் -1
(குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது)
குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது. கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசிவந்ததை ஜீரணிக்க முடியாதவர்களே இப்படுகொலையை செய்தார்கள் என்பது வெளிப்படையான விடயம்.
என்றாலும் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் யார்?
கொழும்பு நகரில் குமார் பொன்னம்பலம், சிவராம், லசந்த விக்கிரமதுங்க, ரவிராஜ், மகேஸ்வரன், மட்டக்களப்பில் நடேசன், ஜோசப் பரராசசிங்கம், திருமலையில் விக்னேஸ்வரன், சுகிரதராஜன், யாழ்ப்பாணத்தில் நிமலராஜன், சிவமகாராசா, ரஜீவர்மன் என நீண்டு செல்லும் பட்டியல்.
இந்த கொலைகளை புரிந்தவர்கள் யார்? இதற்கு உத்தரவிட்டவர்கள் யார்? பின்னணியில் இருந்தவர்கள் யார்?
கொலைகளை திட்டமிட்டவர்கள், உத்தவிட்டவர்கள், கொலைகளை புரிந்தவர்கள், இவர்களில் யாரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படவில்லை.
குமார் பொன்னம்பலம் 2000ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
சமாதானபுறா வேசம் போட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சந்திரிக்காவின் ஆட்சிக்காலம். ஜனாதிபதியாகிய கையோடு தன்னுடைய சுயரூபத்தை காட்டத்தொடங்கினார் சந்திரிக்கா, யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதி.
கொழும்பில் சந்திரிக்கா கலந்து கொண்ட உயர்மட்ட சந்திப்பில் கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்ட போது விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் திட்டம் இருப்பதாக தகவல் கூறப்பட்டது.
புலிகள் கொழும்பை தாக்கினால் தமிழர்களை நானே தலைமை தாங்கி தாக்குவேன் என கொழும்பில் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சந்திரிக்கா கூறினார்.
சண்டேலீடர் பத்திரிகையில் குமார் பொன்னம்பலம் இதை ஆதாரத்துடன் வெளியிட்டார்.
நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டில் இருக்கும் இன்னொரு இனத்தை நானே தலைமை தாங்கி கொலை செய்வேன் என கூறுவது எவ்வளவு பாரதூரமான விடயம். வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் மட்டத்திலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.
சந்திரிக்காவின் இப்பேச்சு தமிழர்கள் மட்டத்திலும் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குமார் பொன்னம்பலம் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் ஜனாதிபதி சந்திரிக்காவை மிகக்கடுமையாக சாடிவந்தார். அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை என்றும் அவர் தமிழர்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பபட்டிருந்தது.
நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா கூறினாரா இல்லையா என தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எப்படி தெரியும்? தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை,
அப்படியானால் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை விட்டது? தமிழர் விடுதலைக்கூட்டணி ஏன் இதில் மூக்கை நுழைத்து கொண்டது? அதை பின்னர் பார்ப்போம்.
சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கருதப்படும் சிலர் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே இதனை சந்திரிக்கா கூறியதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தமிழர்கள் என்று சொல்லப்போனால் இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் மட்டுமே அதில் கலந்து கொண்டிருந்தார்.
சந்திக்கா பேசிய விடயம் எப்படி வெளியில் போனது? தமிழர் என்ற காரணத்தால் ராஜன் மீது சந்திரிக்காவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இலங்கை வங்கி தலைவர் பதவியிலிருந்து ராஜன் தூக்கி எறியப்பட்டார்.
இந்த விடயத்தை ராஜன் தனக்கு சொல்லவில்லை என்றும் வேறு ஒருவர் மூலமே ஆதாரத்துடன் பெற்றதாக குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் இன்னொரு மோசடியும் இடம்பெற்றிருந்தது.
அந்த மோசடியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சாதாரண உறுப்பினர்கள் செய்யவில்லை. சட்டம் படித்தவர்கள் தம்மை சட்டமேதைகள் என கூறிக்கொள்பவர்கள் தான் செய்தார்கள்.
தான் கூறியது எப்படியோ அம்பலமாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தார் சந்திரிக்கா, தனது ஆலோசகரான நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் சந்திரிக்கா, அங்கு சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் தாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்து விட்டு வந்தார்.
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளையும் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரே எடுப்பது போல அக்காலப்பகுதியிலும் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகிய மூவரும் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர்.
சந்திரிக்காவை சந்தித்து விட்டு வந்த நீலன் திருச்செல்வம் ஆனந்தசங்கரியுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த நேரத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தார். தலைவர் சிவசிதம்பரம் சுகயீனமுற்றிருந்தால் தலைவருக்குரிய பணிகளை ஆனந்தசங்கரியே செய்து வந்தார். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சம்பந்தன் கொழும்பில் இருக்கவில்லை. கட்சியின் செயலாளர்தான் அறிக்கையில் கையொப்பம் இடவேண்டும்.
சந்திரிக்கா அம்மையாரின் களங்கத்தை போக்க நீலன் திருச்செல்வமும் ஆனந்தசங்கரியும் இணைந்து அறிக்கையை தயாரித்தனர். அறிக்கையின் கீழ் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் என சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டது. சம்பந்தன் என கள்ள கையொப்பத்தை வைத்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான்.
நீலன் திருச்செல்வத்தின் அலுவலகத்திலிருந்தே சகல பத்திரிகைகளுக்கும் தொலைநகல் மூலம் அறிக்கை அனுப்பட்டது. சண்டேலீடர் பத்திரிகைக்கும் ஒரு பிரதி அனுப்பட்டது. சண்டேலீடர் அலுவலகத்தில் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவும் குமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்டிருந்த போதே தொலைநகல் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கை அங்கு வந்து சேர்ந்தது. அந்த அறிக்கையை லசந்த விக்கிரசிங்க குமார் பொன்னம்பலத்திடம் காட்டினார்.
குமார் பொன்னம்பலம் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல சந்திரிக்காவின் நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என்ற சர்ச்சைக்குரிய விடயத்தை சண்டே லீடரில் எழுதிவருபவர் என்ற ரீதியிலும் லசந்த அந்த அறிக்கையை குமாரிடம் காட்டினார்.
அறிக்கையை பார்த்தவுடன் குமார் உடனடியாக சொன்னார். இதில் பெரிய மோசடி இருக்கிறது. இது சம்பந்தனின் கையொப்பம் இல்லை. நீலன் தான் ஆர்.சம்பந்தன் என்று கையொப்பம் வைத்திருக்கிறார் என்றார் குமார் பொன்னம்பலம். சண்டே லீடர் பத்திரிகையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த கையெழுத்து மோசடி பற்றியும் குமார் பொன்னம்பலம் விலாவாரியாக எழுதினார்.
ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் வைப்பது கிரிமினல் குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சம்பந்தனின் உண்மையான கையொப்பம், நீலன் திருச்செல்வம் இட்ட கள்ள கையெழுத்து எப்படி இந்த கள்ள கையொப்பத்திற்கு பொருந்துகிறது என்பதை படங்களுடனும் ஆதாரங்களுடனும் சண்டே லீடர் வெளியிட்டது.
அக்காலப்பகுதியில் நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். சில வருடங்களுக்கு முதல் விடிவானம் பத்திரிகை உரிமையாளர் மனோ இராசசிங்கம் குமார் பொன்னம்பலத்தை அறிமுகம் செய்து வைத்தார். மனோ இராசசிங்கத்தின் மனைவி சாந்தி சச்சிதானந்தம் ஒருநாள் என்னை குமார் பொன்னம்பலத்திற்கு நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். சாந்தி குமார் பொன்னம்பலத்தின் உறவினரும் கூட.
என்னை லேக்கவுஸ் நிறுவனம் வேலையிலிருந்து நிறுத்தியபோது குமார் பொன்னம்பலம் தான் எனக்காக சட்டநடவடிக்கை எடுத்து வெற்றியும் பெற்றுத்தந்திருந்தார்.
மட்டக்களப்பில் நடைபெறும் கடத்தல்கள், கைதுகள், கொலைகள் பற்றிய விபரங்களை பெறுவதற்காக என்னுடன் குமார் பொன்னம்பலம் அடிக்கடி தொடர்பு கொள்வார்.
அந்த தொடர்பினால் விடிவானம் பத்திரிகைக்கும் தாங்கள் வெளியிடும் அறிக்கைகள் தான் எழுதும் கட்டுரைகளை குமார் அனுப்புவார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கள்ள கையொப்ப அறிக்கை விவகாரத்தையும் குமார் பொன்னம்பலம் சகல ஆதாரங்களுடன் அனுப்பியிருந்தார். அதனை விடிவானம் பத்திரிகையில் பிரசுரித்தோம்.
கள்ள கையெழுத்து விவகாரம் அம்பலமானதை அடுத்து சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் என்னுடைய கையெழுத்தை வைத்தார் என்று.
சட்டம் தெரிந்தவர்கள், மெத்தபடித்தவர்களின் இந்த முட்டாள் தனங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என மௌனமாக இருந்தனர் தமிழ் மக்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் மத்தியில் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்களின் நடவடிக்கைகள், சர்வாதிகாரப்போக்குகள், தன்னிச்சையான முடிவுகள் பற்றி கடும் அதிருப்தியும் ஆட்சேபனையும் எழுந்தன.
அடுத்த வாரம் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. காரசாரமான விவாதங்கள் நடந்தன.
சந்திரிக்காவுக்காக வக்காலத்து வாங்கியது தேவையற்ற செயல். தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை செய்திருக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட சிலர் கூறினர். சந்திரிக்கா அப்படி கூறினாரா இல்லையா என ஆரூடம் கூறுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்ன தேவை இருக்கிறது என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி மீது கண்டனங்கள் எழுந்தன. கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனந்தசங்கரிக்கு கோபம் வந்து விட்டது. டொக்டர் மடத்திற்கு ஹோல் எடுங்கோ, இவனை துலைக்க வேணும் என ஆத்திரத்துடன் கத்தினார் ஆனந்தசங்கரி.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முக்கியஸ்தர்கள் நீலனை டொக்டர் என்றுதான் அழைப்பார்கள்.
வெளியில் சென்ற நீலன் சற்று நேரத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் வந்தார். சம்பந்தனுடனும் ஆனந்தசங்கரியுடனும் இரகசியமாக ஏதோ பேசினர்.
அன்று மாலை நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தனர். நீண்டநேரம் பேசினர். என்ன பேசினர் என்பது யாருக்கும் தெரியாது.
சில தினங்களில் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோருக்கு குண்டு துளைக்காத கார்கள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது. குண்டு துளைக்காத கார்கள் மட்டுமல்ல சில உறுதி மொழிகளையும் சந்திரிக்கா வழங்கினார்.
மற்றுமொரு மோதல் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் குமார் பொன்னம்பலத்திற்கும் இடம்பெற்றது. அந்த விடயங்கள் பற்றியும் குமார் பொன்னம்பலத்தின் கொலையை புரிந்த சாந்த, மொறட்டுவ சமன், சுஜீவ ஆகியோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் அடுத்து வரும் அங்கங்களில் பார்ப்போம்.
( தொடரும் )
-இரா.துரைரத்தினம் –