யாழ் மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி (07.11.2016) காலை முதல் யாழ் மாநகரசபைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் யாழ்.மாநகர பகுதி உட்பட மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல பொது இடங்களிலும் குப்பைகள் பாரியவில் தேங்கி பெரும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மழைக்காலம் ஆரம்பித்துள்ள நகரப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் பெருந்தொகை குப்பைகளால் பாரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுகின்றது. அத்துடன் நுளம்புவேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலையாக மாறியுள்ளது.
இவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நிரந்தர சுகாதார தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் கழிவகற்றல் உள்ளிட்ட மாநகர சபையின் பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளன.
அத்துடன் மாநக சபை வாகன சாரதிகள் சங்கத்தினர், குடிநீர் விநியோகம் மற்றும் வீதி செப்பனிடல் பணியாளர்கள் ஆகியோரும் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கழிவகற்றல் உள்ளிட்ட பணிகளில் மாநகரசபை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் வடக்கு மாகாணசபையில் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடியபோது ஒரு மாதத்திற்குள் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் எனினும் இன்றுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை, எனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழில் புரியும் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி சுகாதார தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.மாநகரசபையில் 382 பேர் நிரந்தர சுகாதார பணியாளர்களாக கடமையாற்றி வருகின்றனர். மேலும் 200 பேர் தேவைக்கேற்ற அடிப்படை சுகாதார தொழிலாளர்களாக கடமையாற்றி வருகிறார்கள். இந்த 200 பேரினதும் வேலைகள நிரந்தரமாக்குமாறு கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.
இதுகுறித்து மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் யாழ் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவிக்கையில்.
யாழ்.நகரப் பகுதியில் 92 ஆயிரம் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளனர். யாழ்.நகருக்கு தினமும் வந்து செல்வேர் தொகை ( மிதக்கும் சனத்தொகை) தினமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 23 மாநகரசபைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கழிவுகளை தரம்பிரித்து அகற்றும் தேசிய திட்டம் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் யாழ்.மாநகரசபையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது.
அத்துடன் யாழ்.மாநகர சபையில் சுகாதார சேவைப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி வெற்றிடம் 382 தற்போது அனுமதிக்கப்பட்ட ஆளணியை விட அதிகமானோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை உடனடியாக நிரந்தர சேவையில் உள்ளீர்ப்பதில் சிக்கல் உள்ளது. எனினுமு் ஆளணியை மேலும் அதிகரிப்பதற்கான திட்டங்களை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம் இதற்கான அனுமதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் இருந்து கிடைக்கப்பெற்றால் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக உள்ளீர்க்க முடியும் எனவும் மாநகரை சபை ஆணையாளர் குறிப்பிட்டார்.