Ad Widget

குண்டுவெடிப்புச் சத்தங்கள் தமிழ்மக்களில் ஏற்படுத்தியிருக்கும் உளநலப் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு தேவை- பொ.ஐங்கரநேசன்

யுத்த காலத்துக் குண்டுவெடிப்புச் சத்தங்களும், குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல்களும் தமிழ் மக்களின் உளநலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

1

ஒலிபெருக்கிகளின் பாவனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நேற்று புதன்கிழமை (30.07.2014) வடமாகாண விவசாய அமைச்சில் திணைக்கள அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதகுருமார்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,

இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருவதோடு பொதுமக்களும் எங்களிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

2

அதிக சத்தத்தால் உரையாடலும் தூக்கமும் பாதிக்கப்படுவதாகத்தான் நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். தண்ணீரில் கலக்கும் நச்சு மாசுகள் போல, காற்றில் கலக்கும் புகை மாசுகள் போல, காற்றில் வந்து சேரும் இரைச்சலும் ஒரு மாசுதான். இந்தச் சத்தத்தால் அதிதிறமையான மாணவர்கள்கூட படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுப் பரீட்சைகளில் தோல்வியடைவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அது மாத்திரமல்ல, அதிக இரைச்சல்களின் மத்தியில் வாழ நேரிடுபவர்கள் வன்முறையாளர்களாகவும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகவும் மாறுவதும் சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

3

நீண்ட காலம் யுத்தச் சூழலில் வாழ்ந்த நாங்கள், குண்டுவீச்சுக்களால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றியும் அங்கவீனங்கள் பற்றியும் அதிகம் பேசியிருக்கின்றோம். ஆனால், குண்டு வீச்சு இரைச்சல்களால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றி அக்கறை கொள்ளவில்லை. யுத்தத்துக்குப் பின்னர் வன்முறையும், வாள்வெட்டுக் கலாசாரமும் தலைதூக்கியிருப்பதற்கு இந்த இரைச்சல்கள் உளரீதியாக ஏற்படுத்திய பாதிப்புகளும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

அதிக இரைச்சல் இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கும், இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்வதற்கும் காரணமாக அமைவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது மாரடைப்புக்கு வழிகோலும். எனவே, எமது சமூகத்தின் உளநலத்தையும், உடல்நலத்தையும் பேணுவதற்கு ஒலிபெருக்கிப் பாவனையை ஒழுங்கு செய்வது அவசியம் ஆகும்.

4

இதனை மதச்சுதந்திரத்தில் தலையிடுவதாகவோ, கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் குறுக்கிடுவதாகவோ யாரும் பொருள் கொள்ளவேண்டியதில்லை. எங்களுக்கு மத அனுட்டானங்களை மேற்கொள்வதற்கும், விழாக்களைக் கொண்டாடுவதற்கும் சுதந்திரம் இருக்கும் அதேவேளை, அடுத்தவர் காதில் ஒலிபெருக்கிகளை அலற வைப்பதற்கு எமக்குச் சுதந்திரம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 6 மணிவரைக்கும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 1 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் இரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரைக்கும் ஒலிபெருக்கிகளை பாவிப்பது ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5

குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக நிகழ்ச்சிகள் நீடிக்குமாயின் ஒலிப்பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஆலய வீதிகள் மற்றும் விழா மைதானங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஒலிபெருக்கிகளைப் பொருத்துவது தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் விளம்பர வாகனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத்து உரத்து அலறும் சினிமாப்பாடல்களுக்குப் பதிலாக மெல்லிசையை ஒலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6

தொடர்புடைய செய்தி

ஒலிபெருக்கிப் பாவனைக்கு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடு

Related Posts