வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக மேல் விசாரணைகளை நடாத்துவதற்கும் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தினை அனுப்பிவைக்கவுள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 133 வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெ ற்றிருந்தது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி விடயத்தினை சபைக்கு கொண்டு வந்தார்.
இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,
அமைச்சர் என கூறப்படும் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் மன்னார் மாவட்டத்தில் 2015 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் வழங்கிய மூக்கு கண்ணாடிகள் கொள்வனவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
2017 ஆம் ஆண்டும் இவ்வாறு மூக்கு கண்ணாடி கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கணக்காய்வு பிரிவு கண்டு பிடித்ததை தொடர்ந்து அதற்கான நிதி வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. என கூறினார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் இந்த குற்றச்சாட்டு சகல மாகாணசபை உறுப்பினர்களுக்குமான பொது குற்றச்சாட்டாக மாறும் அபாயம் உள்ளது. உண்மையில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை கையாளுவதில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பங்கில்லை. ஆகவே இது தான் நடந்தது.
இப்படித்தான் நடந்தது, இவர்தான் ஆள் என்பதை கூறி தெளிவாக பேசப்படவேண்டும் என கூறினார்.
தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில்,
எதிர்வரும் 8 ஆம் திகதி கணக்காய்வு குழுவின் இறுதி கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தின் பின்னர் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,
குணசீலனின் புகழ் பாடும்போது அவருடைய பெயரை பயன்படுத்தலாம். ஆனால் அவர் குறித்து பிழைகளை கூறும்போது பெயரை குறிப்பிடக்கூடாதா? இது வெளிப்படை தன்மைக்கும், நல்லாட்சிக்கும் சிறந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெயர்களை குறிப்பிடாமல் பேசுவதன் ஊடாக தவறுகளுக்கு நாங்களும் உடந்தையாக மாறுகிறோம். என கூறினார்.
தொடர்ந்து அவை தலைவர் கூறுகையில் இந்த விடயத்தில் குணசீலன் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது கொள்வனவு அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்பது கேள்வியாக உள்ளது. இவ்வாறான நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க இயலாது என கூறினார். அத்துடன் இந்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு பாரப்படுத்தப்படும் என கூறினார்.