சங்குவேலியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சங்குவேலியில் கடந்த வாரம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா சன்னா பிரகாஸ் அடங்கிய ஐவர் கொண்ட குழுவே மேற்கொண்டதாக கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் தெரிவித்திருந்தார்.
இந்தக் கொலை சம்பவத்துடனான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐவர் கொண்ட குழுவின் அங்கத்தவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கைது செய்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
இந்தக் கொலையை மேற்கொண்ட ஏனையோரைக் கைது செய்வதற்கான விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் என்ற குடும்பஸ்தரே கடந்த 17 ஆம் திகதி இரவு இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.