குடும்பவாரியான தகவல் திரட்டலுக்கு புதிய திட்டம் – ஆட்பதிவு திணைக்களம்

இலங்கையிலுள்ள சகல மக்களையும் அவர்களது குடும்பவாரியான விபரங்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் நேற்று புதன்கிழமை(05) தெரிவித்தது.

r_m_s_sarathkumara

மீரியாபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கணிப்பீடு செய்வதில் எழுந்துள்ள பிரச்சினையை கருத்திற்கொண்டே இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கடந்த வாரம் மீரியாபெத்தயில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சரியான எண்ணிக்கையினை பெற்றுகொள்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டதுடன் அதிக எண்ணிக்கையானவர்கள் பாதிக்கப்பட்டதான தகவல்களும் வெளியாகின.

எதிர்காலத்தில் இவ்வாறான சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக நாம் இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்தோம். இந்த திட்டத்தின் பிரகாரம் ஒரு குடும்பத்திலுள்ள சகல அங்கத்தவர்களினதும் விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் அவர்களது அடையாள அட்டை இலங்கங்கள் பதிவு செய்யப்படும்’ என்றார்.

’15 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய விபரங்களும் சேகரிக்கப்படுவதுடன் அவர்கள் 16 வயதை அடையும் சந்தர்ப்பத்தில் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு நேரடியாக அறிவுறுத்தப்படுவர். இதனூடாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்’ என்று அவர் கூறினார்.

இதேவேளை, இந்த வருடம் டிசெம்பர் மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் 3.5 இலட்சம் பேரின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் மாத்திரமே எமக்கு கிடைத்துள்ளன. அதில், 2.5 இலட்சம் வரையான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 30 ஆயிரம் வரையான அடையாள அட்டைகளை வழங்குவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

16 வயது பூர்த்தியடையாத விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் 50 ஆயிரம் உள்ளதுடன் 3 ஆயிரம் அளவிலான தகைமையற்ற அல்லது சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் 16 வயது பூர்த்தியடையும் பாடசாலை மாணவர்கள், தமது விண்ணப்பங்களை விரைவாக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அனுப்பும் பட்சத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முன்பாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts