மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மன்னார் பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தை மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம் உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55வயதுடைய பெரியபண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.
இச்சம்பத்தையடுத்து பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் பொலிசார் படையினர் இணைந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு வவுனியாவிலுள்ள குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.