குடும்பத்தினர் அனைவரையும் சிறையில் போட்டாலும் அரசியலில் இருந்து விலகமாட்டேன்!- மஹிந்த

தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

jana-sattana-180316-1

‘ஜன சட்டன’ (மக்கள் போராட்டம் ) என்ற பெயரில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், ஸ்ரீலங்கா கட்சியைச் சேர்ந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே, சமல் ராஜபக்‌ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரி.பி.எக்கநாயக்க, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோகித அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்த நிலையில், அதையும் மீறியே இவர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மாகாணசபை மற்றும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் களமிறங்கியிருந்தனர்.

அத்துடன், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாயணக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பியின் முன்னாள் தலைவரான மக்கள் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பெரும் ஆரவாரங்களுடன் வரவேற்பு அளி்க்கப்பட்டது. கடுமையான நெரிசலுக்கு மத்தியிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ நிகழ்வு மேடையை அடைந்தார். நிகழ்வின் இறுதியில் அவர் கடும் ஆவேசத்துடன் உரையாற்றினார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு:-

“அரசுக்கு எதிராக மக்கள் அலையென திரண்டுள்ளதை காணும்போது மகிழ்வாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்துக்கு நான் வரமாட்டேன் என வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இவர்களைவிட பெரிய மடையர்கள் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. நான் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் வீழ்ச்சி, வங்கித்துறை ஸ்தம்பிதம், உணவுப் பிரச்சினை, புலிகள் என ஐந்து வகையான பிரச்சினைகளை உக்கிரமடைந்திருந்தன. அவற்றை நாம் சமாளித்தோம்.

புலிகளை இரு வருடங்களில் ஒழித்தோம். தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பாதுகாத்தோம். சொபின் பையுடன் வந்த ரிஷாட்டும் இதை இன்று மறந்துவிட்டார். 9 வருடங்களில் நாட்டை பலமான நிலைக்குக் கொண்டுவந்தோம். ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் இருந்தோம். இப்படித்தான் ஆட்சியைக் கையளித்தோம். ஆனால், என்மீது போலிக்கடன் கணக்கு காட்டப்படுகிறது. தகவல்களை ஒளித்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இவையாவும் பொய்யாகும். உண்மை பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே காலத்துக்குக் காலம் போலிக்கதைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பிள்ளைகளை சிறையில் அடைத்து, எனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன். அரசியல் பயணத்தை கைவிட்டுவிடுவேன் என சிலர் நினைக்கின்றனர்.

ஆனால், அது பகல் கனவு மட்டும்தான். அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் நாம் அடிபணியமாட்டோம். என்னையும், ஏன் எனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை கைவிடமாட்டேன். 1976இல் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷாக்களின் பயணம் தொடரும். இதை எவராலும் தடுக்க முடியாது. அரச வளங்களை விற்பனை செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். ஆட்சியை நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள். உரமானியம் வழங்குவோம். 10 நிமிடமாவது இருட்டில் வைக்கமாட்டோம். வேலைவாய்ப்புகளை வழங்குவோம். சீனாவை விமர்சிக்க வேண்டாம். கொழும்பு துறைமுகநகர் திட்டத்தை ஆரம்பியுங்கள். மக்களுடன் மக்களாக நான் இருப்பேன்” – என்றார்.

jana-sattana-180316-2

Related Posts