யாழ். கந்தரோடை பிள்ளையார் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இம் முகாமில் வசிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யுத்தம் காரணமாக கடந்த 1990ம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பெரும் சிரமத்தின் மத்தியில் வசித்து வருகின்றனர்.
இதுவரை காலமும் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மயிலிட்டி, தையிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கூலித் தொழிலேயே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இன்றி நெருக்கடியான சூழலில் வசிக்க வேண்டியுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க இதுவரை காலமும் முகாமிற்கு அருகில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த நீர் மூலம் மக்கள் தமது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர்.
குடிநீர் விநியோகத்துக்கென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு முகாமிலுள்ள குடும்பம் ஒவ்வொன்றும் பணம் செலுத்தியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நீர் விநியோகத்துக்கான பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து முகாம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், முகாம் மக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அப்பால் சென்றே குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் அண்மையில் முகாமின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்த சிறுவர், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குடிநீர் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், இதனால் முகாம் மக்கள் எதிர்நோக்கி வரும் அசெளகரியங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் மறுநாள் உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் அந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் எஸ்.சிவஞானம் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உயரதிகாரிகளிடம் பேசிக் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உறுதியளித்தனர்.
எனினும், இதுவரை முகாம் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.