குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா

‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘விழித்திரு’. கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விழித்திரு’ படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா, எஸ் பி சரண், ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து தன்சிகா கூறியதாவது,

`கபாலி’ படத்தை போல `விழித்திரு’ படத்திலும் தன்னுடைய பாத்திரம் பேசப்படும் படி இருக்கும் என்றார். இப்படத்தில் சென்னையில் உள்ள குப்பத்தில் வாழும் பெண்ணாக தான் நடித்திருப்பதாக கூறிய தன்ஷிகா, அதற்காக குப்பம் பகுதியில் வாழும் மக்களிடம் இருந்து அவர்களது வாழ்க்கை, அனுபவம் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொண்டு பின்னரே நடித்தேன் என்றார். மேலும் இப்படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகையாக தான் நடித்திருப்பதாகவும், அவருடைய வலிமை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்த தன்ஷிகா, குறிப்பாக அவரது கொள்கையை தான் விரும்புவதாக தெரிவித்தார்.

அதாவது நான் பார்த்த வரையில், படங்களில் அவர் நடிக்கும் போதும், பாடல்களிலும் பெண்களை தொட்டு நடிப்பது போன்ற காட்சிகளை அவர் தவிர்த்திருப்பார் என்று கூறினார். இப்படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றார். தண்டனைகளை அதிகமாக்குவதன் மூலமே குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறிய தன்ஷிகா ஒருமுறை தான் இரவு நேர படப்பிடிப்பு முடித்து திரும்பிய போது, கேரளாவில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.

குடித்துவிட்டு வந்த மர்ம நபர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அவர்களிடம் இருந்து தன்னை சிலம்பாட்டத்தின் மூலமே காப்பாற்றிக் கொண்டதாகவும் கூறினார். `பேராண்மை’ படத்தின் போது தான் சிலம்பாட்டம் கற்றுக்கொண்டதாக தன்ஷிகா தெரிவித்தார். எனவே பெண்கள் அவர்களது இக்கட்டான சூழலில், அவர்களை காப்பாற்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தன்ஷிகா வலியுறுத்தி உள்ளார்.

Related Posts