குடாநாட்டில் அண்மைய காலங்களாக பனைமரங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதால் பனைவளம் அழிவடையும் நிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்று இருக்கின்றமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எனது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினூடாகவே பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக பனைமரங்கள் தறிக்கப்படுவதில் உரிய வகையிலான கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில் அண்மைய காலங்களாக எவ்விதமான கட்டுப்பாடுகளோ அனுமதியோ இன்றி பெருமளவான பனைமரங்கள் தறிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அண்மையில் கூட தென்மராட்சி மிருசுவில் பகுதியில் எவ்விதமான அனுமதியும் பெறப்படாமல் 71 பனைமரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் மூவரைப் பொலிசார் கைது செய்திருந்ததையும் பின்னர் சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்திருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பனைவளத்தை தமது ஜீவனோபாயமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த வருகின்றனர் என்பதுடன் இவ்வாறு எதிர்காலத்திலும் பனைமரங்கள் அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படும் பட்சத்தில் இக்குடும்பங்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும்.
கடந்த யுத்தகாலத்தின்போது வடபகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பனைமரங்கள் அழிவடைந்திருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளும் அதேவேளை இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை உரிய சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமும் காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே பனைமரங்கள் அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை கடந்த யுத்தகாலத்தின்போது பெருமளவில் அழிவடைந்திருந்த பனைமரங்களுக்கு பதிலீடாக அதனை ஈடுசெய்யும் செய்யும் வகையில் பனைமரங்களை மீள்நடுகை செய்யும் திட்டத்தை பரவலாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.