குடாநாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

2013_02_04_6யாழ். குடா நாட்டின் பல பகுதிளிலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோறும் நேற்றுக்காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நேற்று இடம் பெற்றிருந்த நிலையில் பிரதான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றது.

மாவட்டங்கள் தோறும், பொது நிர்வாக உள்ளூநாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

யாழ். மாவட்டத்தில், யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பாடசாலை மாணவிகள், தமிழ்மொழியில் தேசியம் கீதம் இசைத்தனர்.

இதேபோன்று யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் அந்தந்தப் பகுதி பிரதேச செயலாளர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். மேலும் பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகம் என்பன தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு வர்ண மின் குமிழ்களும் ஒளிரவிடப்பட்டிருந்தன.

இதனை விட யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இராணுவத்தினர் தாம் நிலை கொண்டுள்ள முகாம்களில் கொடிகளைப் பறக்க விட்டிருந்தனர்.

இதேவேளை, யாழ்.நகரப் பகுதியான ஐந்து சந்திப் பகுதியில், யாழ்.கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தால் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடாத்தப்பட்டன. அத்துடன் அந்தப் பகுதியால் போவோர் வருவோர் மறிக்கப்பட்டு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

தென்மராட்சி பிரதேசத்தில் அரச திணைக்கள அலு வலகங்கள், கூட்டுறவு அலுவலகங்கள், வங்கிகள், பொலிஸ் நிலையங்கள், படைமுகாம்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களிலும் திணைக்களத் தலைவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

சாவகச்சேரி, கொடிகாமம், கைதடி ஆகிய பிரதேசங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டன.

நேற்று பொது விடுமுறை தினமாக இருந்த போதிலும் அனைத்து அலுவலகங்களிலும் அனைத்து தர உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிவுற்றதும் சுதந்திர தின உரை திணைக்களத் தலைவர்களால் நிகழ்த்தப்பட்டன.

சாவகச்சேரி நகரப் பகுதியில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வில் வர்த்தகர்கள், படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலகங்களில் நேற்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஏனைய திணைக்களங்கள், அரச அலுவலகங்கள், சபைகள், கூட்டுத்தாபனங்களிலும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன. பருத்தித்துறை, நெல்லியடி பஸ் நிலையங்களிலும் படையினரின் ஏற்பாட்டில் தேசியக் கொடிகள் ஏற்றப் பட்டு பறக்கவிடப்பட்டிருந்தன.
freedom5

Related Posts