குடாநாட்டின் நிலைமை மோசமடைந்து செல்கின்றது; ஆஸ்திரேலியத் தூதுவரிடம் த.தே.கூ.எடுத்துரைப்பு

tnaயாழ். குடாநாட்டின் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட இன்னும் மோசமடைந்து செல்கின்றது. இங்கு ஜனாநாயகமற்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. மக்கள் இங்கு வசிப்பதற்கே அச்சப்படும் நிலைமைதான் காணப்படுகின்றது.இவ்வாறு ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

யாழ். மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவிக்கையில் யாழ்.மாவட்டத்தில் இன்னமும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை.

அவர்களது காணிகள் இராணுவத்தினருக்கே உரியன என்ற கோதாவில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியும், ஜனாதிபதியும் தெரிவிக்கின்றனர். இவர்கள் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றனர். இதுதான் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கின்றது என்று கூறினோம்.

இதன்போது ஆஸ்திரேலியத் தூதுவர், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தின் நிலைமை எவ்வாறு காணப்படுகிறது என்று கேட்டார்.

கடந்த ஆண்டைவிட இன்னும் மோசமான நிலைமையே காணப்படு கிறது என்று நாம் தெரிவித்தோம். யாழ். குடாநாடு தொடர்ந்தும் இராணுவ நெருக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டு செல்கின்றது.

பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. காரணமற்ற கைதுகள் தொடர்கின்றன. இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு இந்த அரசின் செயற்பாடுகளால் குழப்பியடிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கில் இனப் பரம்பலில் இது மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. மக்கள் இங்கு வசிப்பதற்கே அச்சமான நிலைமை காணப்படுகின்றது.

இதனைத் தீர்க்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும். எங்களது உரிமைகள் வழங்கப்பட்டாலேயே எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும். இதனைப் புரிந்து கொண்டு சர்வதேச சமூகம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தார்.

Related Posts