குசல் ஜனித் பெரேராவிற்கு போட்டித் தடை

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு கிரிக்கட் விளையாட சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட இந்த போட்டித் தடையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாகவே இவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குசல் ஜனித் பெரேரா தெரிந்து கொண்டே தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குறிப்பிடப்படவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குசல் ஜனித் பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டு நியூஸிலாந்து தொடரில் இருந்து அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் சிறுநீரை மீண்டும் இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், பீ மாதிரி (B Sample) சோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை படி அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரர் ஒருவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குசல் ஜனித் பெரேரா தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013 ஜனவரி 13 இல் தினேஸ் சந்திமல்லின் இடத்துக்கு பதிலாக விளையாடினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

இவர் தனது முதல்தரப் போட்டி ஒன்றில் 270 பந்துகளை எதிர்கொண்டு 330 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

குசல் ஜனித் பெரேரா தனது முதலாவது நூறாவது ஓட்டத்தை 2014 பெப்ரவரி 22 இல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிப் பெற்றார்.

இதில் 124 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களைப் பெற்றார்.

Related Posts