கீரிமலையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதி முகாமை கைவிட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். இன்று மாலைக்குள் கீரிமலை இராணுவ முகாம் முற்றாக கைவிடப்படவுள்ளது.
அதன் பின்னர் இராணுவத்தினர் கீரிமலையை அண்டிய பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நிர்மாணித்துள்ள அதிசொகுசு மாளிகையை இராணுவ முகாமாகப் பயன்படுத்தவுள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் இருப்பவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது ஓய்வு எடுப்பதற்காக இந்த அதிசொகுசு ஆடம்பர மாளிகை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சுமார் 200 கோடி ரூபா பணம் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என்று கட்டடக்கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஜனாதிபதிகளுக்கான ஓய்வுத் தலத்தை நட்சத்திர ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்கும் திட்டமொன்றை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.