கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம் முழுநிலவு நாளாகிய 10 ம் திகதி,வெள்ளிக்கிழமைக்கு (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

அரசாங்கமானது கபடத்தனமான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் எமது அரசியல் விருப்புகளை புறந்தள்ளிய ஒரு போலியான அரசியலமைப்பு ஒன்றை எம்மக்கள் மீது திணிக்க முற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், எமது மக்களின் உண்மையான கோரிக்கைகள் என்ன என்பதை மீண்டும் உலகிற்கு எடுத்துக்கூற வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கின்றோம்.

குறிப்பாக, இலங்கையில் நியாயமான சமாதான முன்னெடுப்புகள், பொறுப்புக்கூறல் குறித்தான தமது செயற்பாட்டு அறிக்கையை ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசு எதிர்வரும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய சூழ்நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நிரந்தர தீர்வு குறித்தான எமது எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக கூறவேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது.

இவை குறித்தும் அரசியலமைப்பு மற்றும் சமகால அரசியல் குறித்தும், எம் தாயகத்தின் அனைத்து இனக்குழுமங்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்ததுமான மக்கள் விழிப்புணர்வு பணிகளில் தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து நகரங்கள் கிராமங்கள்தோறும் சென்று முழு அளவிலாலான மக்கள் விழிப்புணர்வு பணிகளை இன்னமும் பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதை நோக்கமாகக்கொண்டும், தவிர்க்கமுடியாத வேறுசில காரணங்களாலும் , இந்த எழுக தமிழ் நிகழ்வானது எதிர்வரும்மாசி 10 ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசத்தில், கிழக்கு மண்ணின் இளைஞர் கழகங்கள் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மத நிறுவனங்கள், தன்னார்வ செயற்பாட்டாளர்கள் என அனைவரையும் பேரவையின் கலந்துரையாடலின் பங்காளர்களாகி, மக்கள் பணியாற்ற முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை கோருகின்றது.

எம்மிடையேயுள்ள அனைத்து பேதங்களையும் களைந்து கொள்கையின்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைவோம்.

நன்றி

தமிழ் மக்கள் பேரவை.

Related Posts