கிழக்கில் “எழுக தமிழ்”- மக்கள் அணி திரள்வுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையானது எமது மக்களின் பிரச்சினைகள் குறித்தான வெளிப்படையான உரையாடலை இலங்கைத்தீவின் அனைத்து இன மக்களுடனும் நேரடியாகவே  மேற்கொள்ளும் தனது முடிவை செயல்வடிவில் முன்னெடுக்கத்தொடங்கியுள்ளது . “வடக்கு தெற்கு உரையாடல்” எனும் தொனிப்பொருளில் தெற்கு மக்களுடனான நேரடிதொடர்பாடலை அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உள்ளது . அதன் ஒரு அங்கமாக  22/11/16 அன்று கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறுபகுதிகளிலும் உள்ள  முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இனமத பேதம் கடந்த மனிதத்துவத்துடனும் நேர்மையுடனும் எமது பிரச்சினை குறித்தான வெளிப்படையான உரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்தும் கொண்டுநடத்தும்.

இப்படியான வெளிப்படையான கலந்துரையாடல்களும் விளக்கமளிப்புகளும் மக்கள் அணிதிரள்வுகளும்,  தமிழர்களின் பிரச்சினைகளையும்  அதற்கான நியாயமான தீர்வுகளையும் பற்றிய புரிதலையும் அதற்கான தமிழ் மக்களின் ஜனநாயக விருப்புகளையும் இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் தெளிபுபடுத்தும் என நாம் திடமாக நம்புகிறோம்.

மக்கள் தமது விருப்பை ஜனநாயகரீதியில் திரும்ப திரும்ப உறுதியுடன்  வெளிப்படுத்தும்போது அதை எவரும் புறந்தள்ளமுடியாத நிலை ஏற்படும்.இச்செயற்பாடுகளும் நீதிக்கான எமது பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று  தமிழ் மக்கள் பேரவை உறுதியாக நம்புகிறது.

அப்படியான செயற்பாட்டின் ஒரு  அங்கமாகவே யாழ்ப்பாணத்தில் தொடங்கிய எழுக தமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வு அமைந்திருக்கிறது.  தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளையும் அன்றாட நடைமுறை பிரச்சினைகளையும் உலகிற்கு மீண்டும் எடுத்துக்கூறும் ஜனநாயக அகிம்சைவழி எழுச்சியாக இந்த “எழுகதமிழ்” அணிதிரள்வானது கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்றிருந்தது .

மக்களின் பேராதரவுடனும் பேரெழுச்சியுடனும் நிகழ்ந்தேறிய இந்நிகழ்வானது , எமது மக்களின் அபிலாசைகளை ஜனநாயக வழியில் எடுத்துக்கூறி,  எமது அடிப்படை பிரச்சினைகள் நியாயத்துடன் அணுகப்பட்டு  அதன்பிரகாரம் உருவாவதே நீடித்து  நிலைக்கக்கூடிய நிம்மதியான தீர்வாக அமையும் என தெளிவாக காட்டியிருந்தது .

இந்த ஜனநாயக வெளிப்படுத்தலுக்கு  தாயகத்திலும தெற்கிலும் புலத்திலும் தமிழகத்திலும்  எழுந்த ஆதரவுக்குரல்களை  எம்மக்களின் எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை ஒளியாகவே தமிழ் மக்கள் பேரவை பார்க்கிறது.

அதே வேளை எமது மண்ணில் தொடர்ந்து கொண்டிருக்கும் நில, கலாச்சார பொருளாதார சிதைப்புகளும் ஆக்கிரமிப்புகளும் இன்னமும்  தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.

இதன் மத்தியில் , எமது பிராசினைக்கு தீர்வாக அமையமுடியாத முழுமையற்ற அரசியலமைப்பொன்றை,  எமது பிரச்சினைக்கான தீர்வென்ற பெயரில்  வார்த்தைஜாலங்களால் அலங்கரித்து செயற்கையான நிர்ப்பந்தங்களை உருவாக்கி  எமக்குள் திணித்து விட நடக்கும் சூழ்ச்சிகளும் தொடர்ந்தும் அரங்கேறிவருகின்றன.இவற்றிற்கெதிராகவும் தொடர்ச்சியாக நீதி வேண்டி நாம் குரலெழுப்ப வேண்டியுள்ளது.இவை “எழுக தமிழ் ” மக்கள் எழுச்சியின்  தொடர்ச்சியை நமக்கு வலியுறுத்துகின்றது.

எமது மக்களும், எழுகதமிழின் அடுத்த மக்கள் அணிதிரள்வு ,   எம் தாயகத்தின் மிக முக்கிய பகுதியாகிய கிழக்கில் நடைபெறவேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றார்கள் .கடந்த 13/11/16 அன்று கூடிய பேரவையின் கூட்டத்தொடரில் எமது மக்களின் அடிப்படை மற்றும் அன்றாட பிரச்சினைகளை ஜனநாயகரீதியில் வெளிப்படுத்தும்  “எழுக தமிழ்” நிகழ்வை கிழக்கு மண்ணில் மட்டக்களப்பில்  2017  தை மாதம்  நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இனத்தின் நீண்டகால நலனைக்கருத்திற்கொண்டு  மக்கள் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த ஜனநாய எழுச்சியும் விழிப்பும் தமிழர் தாயகமெங்கும் பரவுவதற்கு எம்முடன் கைகோர்க்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம். இனத்தின் இருப்பிற்கான இந்த கோரிக்கையை அனைவரும்  ஏற்று, கட்சி வேறுபாடுகளை களைந்து அனைவரும் அணிதிரள வேண்டும் என அழைக்கிறோம்.

இவை தொடர்பான மக்கள் கலந்துரையாடல்கள் ஏற்கனவே கிழக்கில் நடந்துவருகின்றது .உங்கள் பகுதிகளிலும் இவற்றை ஏற்பாடுசெய்து மக்களிற்கான அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதை மேலும் வளப்படுத்த உதவுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.

அத்தோடு ஒரு மக்களுக்கான அமைப்பு என்ற வகையில் தமிழ் மக்கள் பேரவையினை வழிநடத்தும் பொறுப்பு  எமது மக்களிடமே இருக்கிறது என தமிழ் மக்கள் பேரவை உறுதியாக நம்புகிறது. தமிழ்மக்கள் பேரவையின் செல்நெறி தொடர்பாகவும் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மக்களிடமிருந்து வந்த கருத்துகளே இதுவரையும் எம்மை வழிப்படுத்திவந்திருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மேலும் தொடரவேண்டும் என நாம் மக்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.  நேரடி அரசியல் செயற்பாடுகள் மற்றும்  கல்வி கலை சமூக பொருளாதார விடயங்கள் என எமது தேசக்கட்டுமானத்தை வளப்படுத்தும் அனைத்து தளங்களிலும் மக்களின் கருத்துகளையும் செய்ற்பாடுகளையும் செயற்பாட்டாளர்களையும் நாம் வரவேற்கின்றோம்.இப்படியான தொடர்பாடல்களையும் மக்கள் கருத்துகளையும் மேலும் உள்வாங்குவதை மேம்படுத்தும் நோக்கில் பேரவைக்கான உத்தியோகபூர்வ புதிய இணையத்தளம் 13/11/16 அன்று  tpcouncil.org எனும்முகவரியில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகும்.

இந்த இணையத்தளத்தின் மக்கள் கருத்து பகுதியூடாகவும்  tpcofficialmail@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தமிழ் மக்கள் பேரவையை தொடர்பு கொள்ளலாம்.இவையே தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் முறைமைகளாகும்.

இவ்வாறு இன்று வெளியிட்ப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts