கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயதுச்சிறுமியினுடைய மரணம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்கப்பட்டுள்ள 14 வயதுச்சிறுவனை தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை வைத்துப்பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரம் பகுதியில் சந்திரகுமார் ஜெருசா என்ற மூன்று வயதுச்சிறுமி காணாமல் போன நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி குறித்த சிறுமியென சந்தேகிக்கப்படும் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் காணாமல் போயிருந்தபோது சிறுமி அணிந்திருந்த ஆடையும் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக 14 வயதுச்சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சிறுவனை நேற்று முன்தினம் 10ஆம் திகதி வரை அச்சுவேலியில் உள்ள சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் வைத்துப்பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 10ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சிறுவனை எதிர்வரும் 20ஆம் திகதி வரை குறித்த பாடசாலையில் பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்களும் சிறுமியின் தாயாரது இரத்த மாதிரியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.