அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மருந்துகளை நோயாளிக்கு வழங்க, நோயாளியின் வசிப்பிடத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கிளினிக் கொப்பியில் சரியான முகவரி வழங்கப்படாவிட்டால், நீங்கள் மருந்து பெறும் மருத்துவமனைக்கு அழைத்து தகவலைப் புதுப்பிக்கவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வைத்தியசாலை ஊழியர்கள் உங்கள் மருந்து தொகுப்பை தயார் செய்து, உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணை வழங்கி, தபால் நிலையத்திற்கு வழங்குவார்கள். அவை உங்கள் வீட்டிற்கு தபால் ஊழியர் மூலம் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு தகவல்களை வழங்கும்போது உங்கள் பகுதியில் உள்ள குடும்ப சுகாதார சேவை அலுவலர் அல்லது கிராம சேவையாளரின் உதவியை நாடுவது நல்லது என்றும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.