கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடுகுளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட முறைமைதான் காரணம், இரணைமடு பொறியியலாளர்கள் அதற்கு பொறுப்புகூற வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தை ஆராய மூவர் அடங்கிய குழுவை வடக்கு ஆளுனர் நேற்று நியமித்துள்ளார்.
யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ( பொறியியல்) எஸ்.சண்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடந்த கலந்துரையாடலின்போதும், இரணைமடு நீர் வெளியேற்றம் மற்றும் பொறியியலாளர்களின் நடவடிக்கை குறித்து டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்தே அவசர கதியில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார், இரணைமடு பொறியியலாளர்களின் நீர்முகாமைத்துவ குறைபாடே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என முகப்புத்தகத்தில் ஏற்கனவே கருத்திட்டுள்ளார்.
மோசமான முகாமைத்துவமே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முகப்புத்தகத்தில் வலியுறுத்தி வந்தவர், தற்போது இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இரணைமடு குளத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழேயே இந்த விவகாரம் கையிலெடுக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.