யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர்.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,
“யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி, யாழ். பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில், வழிபாட்டு நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலை, பல்கலைகழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டது.
இந்தநிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாய பீடம் பொறியியல் பீடம், மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கபட்டு, கல்விச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில், புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.
சில காலங்களுக்கு முன்னர். அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்ட நிலையில், அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும், மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓத, பல்கலைகழக நிர்வாகம் விரைந்து செயற்பட்டது.
அத்துடன், பௌத்த கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், இந்து மாணவா்கள், மரத்தின் கீழ் பிள்ளையாா் சிலை மற்றும் சிவன் சிலையயை வைத்து வழிபட ஆரம்பித்துள்ளனர்.
இதனை அறிந்த நிர்வாகம், உடனடியாக பிள்ளையாா் சிலையை அங்கிருந்து எடுத்துச்சென்று திருமுறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளது.
அதனையடுத்து, பிள்ளையாா் சிலை, முறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், சிவன் சிலையை வைத்த மாணவன், அதனை எடுத்துச்சென்று பாதுகாப்பாக பல்கலைகழக வளாகத்தின் வெளியே ஒரு வீட்டில் வைத்துள்ளான்.
இதனையடுத்து, வழிபாட்டுக்கு நிரந்தரமாக ஆலயம் ஒன்று அமைக்கப்படும் வரை, பிள்ளையாா் சிலை இருந்த இடத்தில் தற்காலிகமாக வழிபடுவதற்குரிய ஏற்பாட்டை செய்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இதுவரை மாணவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட இடத்தில், சிலை போன்ற கல்லை, கடவுளாக வைத்து அதற்கு கிடுகு மூலம் சிறிய கொட்டில் ஒன்றையும் அமைத்து, மாணவர்கள் வழிபட ஆரம்பித்துள்ளனா்.
ஆனால், தற்போது அதற்கு பல்கலைகழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாகவும், சிங்கள மாணவா்கள் வழிபடுவதற்கு ஏற்ற வகையில், புத்தர் சிலை வைக்கப்பட்டு கோவிலும் புனரமைக்கப்படும் நிலையில், இந்நடவடிக்கை, பல்கலைகழத்தில் இருக்க வேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக என மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பௌத்த விகாரை இருப்பது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், ஏனைய மாணவர்கள் வழிபடுவதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தான் உத்தியோகபூர்வமாக கருத்து கூற முடியாது என்றும் அதற்கு பல்கலைகழக பதிவாளருடன் தொடர்புகொள்ளுமாறும் கூறினார்.
யாழ். பல்கலைழக பதில் பதிவாளாரிடம் இது குறித்து கேட்டதற்கு, “பல்கலைகழ நிர்வாகம் எந்த தகவலையும் இதுவரை அறியவில்லை” என்றார்.