எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்
நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும் 341 வேட்பாளர்களும், 297 நியமன பிரதிநிதிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில் கரைச்சி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகளும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.
பளை பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும் என ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.
ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழு, ஜே.வி.பி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளே கிளிநொச்சியில் போட்டியிடுகின்றன.
நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும், சமாதானமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவும் தங்களது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அருமைநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.