கிளிநொச்சி மாணவன் விவகாரத்தில் வழக்கை திசைதிருப்பினர் பொலிசார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கஞ்சாகடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியதற்காக பாடசாலை மாணவன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை பொலிசார் திசைதிருப்பியது அம்பலமாகியுள்ளது. வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் நேற்று முன்தினம் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் போது, கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாய மாணவன் ஒருவர், தமது வீட்டு சூழலில் கஞ்சா, கசிப்பு விற்பவர்களை பற்றிய தகவலை வழங்கினார்.

இதையடுத்து மாணவன் தாக்கப்பட்டது, பாடசாலைக்குள் கும்பல் புகுந்து அச்சுறுத்தியது போன்ற பரபரப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.

கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்பட்டிருக்கவில்லையென, வடபிராந்திய மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும், வடக்கு ஆளுனரிடமும் முறையிடப்பட்டது.

வடக்கு ஆளுனர், வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரிடம் இது விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்தார். கிளிநொச்சியிலுள்ள சகல பொலிஸ் உயரதிகாரிகளையும் அழைத்து, மாணவனின் தந்தையையும் அழைத்து மூன்று மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போதே, பொலிசார் வழக்கை திசைதிருப்பியது அம்பலமானது.

மருத்துவமனைக்கு வந்த போக்குவரத்து பொலிசார், மகனின் துவிச்சக்கரவண்டியில் முன்பக்க விளக்கு இல்லை, முன் பிரேக் இல்லை என்றனர். இதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் தண்டப்பணம் செலுத்த வேண்டி வருமென்றனர். தினமும் அலைய வேண்டி வருமென்றனர். நாளாந்தம் மேசன் வேலை செய்பவன் நான். தினமும் வழக்கிற்காக என்னால் அலைய முடியாதென பொலிசாரிடம் கூறினேன் என வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மாணவனின் தந்தை தெரிவித்தார்.

சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதமொன்றில் போக்குவரத்து பொலிசார் தன்னிடம் கையொப்பம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

விபத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டாம் என சிங்கள மொழியில் எழுதிய கடிதத்திலேயே போக்குவரத்து பொலிசார் கையொப்பம் வாங்கினார்கள் என்பது, பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசாரணையில் அம்பலமானது.

மாணவன் விபத்திற்குள்ளானபோது, அவரை காப்பாற்றி வீடு கொண்டு வந்த எவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தவில்லையென்பதும் தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர், அதிகாரிகளை கடுமையான கண்டித்தார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதிய முறைப்பாடு ஒன்றை வழங்கும்படி, சிறுவனின் தந்தைக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, நேற்று முன்தினம் புதிய முறைப்பாடு ஒன்றை சிறுவனின் தந்தை பதிவு செய்தார்.

Related Posts