கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசும் பொலிஸ் இல்லை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பொருட்டு பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள், நீண்டநேரம் காத்து நின்றே, தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைவிட, இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் தொலைபேசியூடாகதொடர்பு கொண்டு, தகவல்களை வழங்க முற்படுகின்றபோதும், அங்கு தமிழ் மொழி அல்லது ஆங்கில மொழி தெரிந்த பொலிஸார் எவரும் கடமையில் இருப்பதில்லை. தமிழ் பேசத் தெரிந்த பொலிஸாருடன் கதைக்க வேண்டும் என்று கேட்கும்போது, தொலைபேசி அழைப்பை துண்டித்துவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் அவசர முறைப்பாடுகள் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்ளை உடனடியாக வழங்கமுடியாத நிலை காணப்படுகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் இலகுவாக சேவைகளைப் பெறக்கூடிய வகையில், போதிய தமிழ்பொலிஸார் நியமிக்கப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Posts