போதைப்பொருள் பாவனை தொடர்பாக தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காலை 9 மணிக்கு டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கண்டனப் பேரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை சென்றடையவுள்ளது.
இதன்போது குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் காயமடைந்திருந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.