யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்த கிளிநொச்சியில் யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.
குறித்த நீர்ததாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால், கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளது.
யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் பாரிய அழிவுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றை அபிவிருத்தி செய்த அரசாங்கம், விடுதலைப்புலிகளினால் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை மாத்திரம் யுத்த அழிவுச் சின்னமாக பேணி வந்தது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெற்ற பல கூட்டங்களிலும் இது தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. அந்தவகையில் தற்போது குறித்த நீர்த்தாங்கி உள்ள பகுதியை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.