கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களப் பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி எனத் தெரிவித்து அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியளவில் சென்றிருந்த நில அளவையாளர்கள், அளவீட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த காணி உரிமையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு மத்தியில் அளவீட்டு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணி தனியாருடையது எனவும் அதன் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும் அவர்கள் வருகை தரும்வரை காணியை அளவீடு செய்யும் நடவடிக்கையினை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, எழுத்து மூலமான கடிதமும் வருகை தந்திருந்த நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவையாளரும் அங்கு சென்றிருந்த நிலையில், காணி ஆவணங்கள் தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்தார்.
மேலும், அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பிர் சி.ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் காணி அளவீட்டை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். இதையடுத்து, குறித்த அளவீடு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த காணி தொடர்பாக உரிமையாளர்கள் இருப்பின் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்கனவே கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.