கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரணைமடு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது.
மேலும், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினூடாகவும் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை செய்து முதலில் சிறுமியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸார் கூறினர்.
சிறுமியை பணத்துக்காக விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமியின் உறவினர்கள் அனைவரிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்று வருபவர்கள். இந்த சிறுமியுடன் தாயாரும் வேறு சிலரும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை வாய்க்காலில் குளிப்பதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
சிறுமி நடக்க சிரமப்பட்டதையடுத்து அவ்வழியாக துவிச்சக்கரவண்டியில் சென்ற 14 வயதுச் சிறுவனிடம் சிறுமியை வாய்க்கால் வரையும் கொண்டு சென்று விடுமாறு தாய் அனுப்பியுள்ளார்.
தாயார் வாய்க்காலடிக்கு வந்தபோது, சிறுமியைக் காணவில்லை. துவிச்சக்கரவண்டியில் கூட்டிச் சென்ற சிறுவனிடம் விசாரணை செய்த போது, தான் சிறுமியை வாய்க்காலடியில் விட்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து, சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்தச் சிறுவன் மற்றும் சிறுமியின் உறவினர்கள் என 5பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, கடற்படையினர், இராணுவத்தினர், பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டும் சிறுமி பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. சிறுமியை காட்டேரி கடத்தியிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.