சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
கிளிநொச்சி நகரின் மத்தியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் பயிற்சி தடாகம் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்குரிய அரங்குகளுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், நீச்சல் தடாகம், மற்றும் உள்ளக விளையாட்டரங்கு என்பவற்றின் பணிகள் நிறைவுற்ற நிலையில் ஏனையவற்றின் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது அரைகுறையில் காணப்படுகிறன.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற தயாசிறி ஜயசேகர 2015 ஒக்ரோபர் 27 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அவா் விரைவாக நிதி விடுவிப்புகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தாா் ஆனால் அவை எதுவும் இடம்பெறவில்லையென மக்கள் மேலும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 200 மில்லியன் ரூபா அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கடந்த மாதம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல், பொலனறுவை மாவட்ட மைதானங்களின் பணிகள் முடிவுற்றுள்ளன எனவும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
எனவே குறித்த விளையாட்டு மைதானத்தை இனியும் காலம் தாமதிக்காது விரைவாக புனரமைத்து வழங்குமாறு பொது மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.