கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் கைப்பற்றியதாக தெரிவித்துள்ள பொருட்கள் எதுவும் தமது அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.ஆனால் அவ்வாறானதொரு பையையோ, ஆயுத ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான பொருட்கள் எதுவும் அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், அதன் கிளிநோச்சி மாவட்ட அமைப்பாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். மேலும் அண்மையில் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதற்கு எதிராக நாம் செயற்பட்டோம். இவ்வாறு இடம்பெற்ற அநீதியான விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுச் சென்றோம்.இந்நிலையில் கடந்த டிசம்பர் நான்காம் திகதியிலிருந்து என்னுடைய பாதுகாப்பிற்கு இருந்த பொலிஸாரும் விலக்கிக்கொள்ளப்பட்டனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைக்கு அமைவாக இந்து பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.இது தொடர்பில் பல உயர்மட்டங்களுக்கு அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையிலே தனது அலுவலகத்தில் இருந்து இவ்வாறான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இராணுவத்தினர், பொலிஸார், குற்றப்புலனாய்வினர் என சுமார் 55 பேர் ஏழு வாகனங்களில் வந்து எனது அலுவலகத்தை சோதனையிட்டு பல பொருட்களை கைப்பற்றியதாக கூறியுள்ளனர்.இது தமிழர் பிரதிநிதித்துவத்தில் இருந்து என்னை விலக்கிக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியாகும் என்றார்.