கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக, நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது. 36 அடி கொண்ட இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின்போது நீர் வருகை அதிகரிக்கலாம் எனவும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனவே, மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 26′ அடி வான் உயரம் கொண்ட கல்மடு குளம் 22′- 03′ அடியாகவும், 12′ அடி வான் உயரம் கொண்ட பிரமந்தனாறு குளம் 08′- 03′ அடியாகவும் உயர்ந்துள்ளது.
அதேபோன்று 25′ அடி வான் உயரம் கொண்ட அக்கராயன்குளம் 19′- 10′ ஆகவும், 10” அடி வான் உயரம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 07′- 03′ அடியாகவும், 19′ அடி வான் உயரம் கொண்ட புதுமுறிப்பு குளம்15′-07′ அடியாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் 8′ அடி வான் உயரம் கொண்ட குடமுருட்டிகுளம் 08′- 04′ உயர்ந்து 04′ வான் பாய்வதாகவும், 09′- 06′ அடி வான் உயரம் கொண்ட வன்னேரிக்குளம் 09′- 08’அடியாக உயர்ந்து 2′ வான் பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை 10′- 06′ அடி வான் உயரம் கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவு மட்டத்தை இன்று காலை 9 மணியளவில் அடையும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பத்தில், கனகாம்பிகை குளத்தின் கீழ் உள்ள வெள்ள அனர்த்தம் உள்ள பிரதேசங்களான இரத்தினபுரம், கனகாம்பிகைகுளம், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் பன்னங்கண்டி, உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள், தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் நீர் நிலைகளை பார்வையிட செல்வோர் அனைவரும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.