கிளிநொச்சியில் 500 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு-சுவாமிநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வாரம் தெல்லிப்பளை பிரதேசத்தில் 701.3 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே விரைவில் 500 ஏக்கர் காணி கிளிநொச்சியில் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் விடுவிக்கப்கபடவுள்ள காணிகளுடன் மொத்தமாக 4 ஆயிரத்து 300 ஏக்கர் காணிகள் ஒரு வருட காலத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.

மேலும் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி வருவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பகுதிகளில் பல வீதிகள் இராணுவ முகாம்களுக்குள் காணப்படுவதனால் மக்களின் காணிகளை ஊடறுத்து புதிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பழைய வீதிகளை இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து தருமாறும் அமைச்சர் சுவாமிநாதனிடம் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், மக்களின் காணிகளை ஊடறுத்துச் செல்லும் வீதிகள் அமைந்துள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தாம் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

Related Posts