கிளிநொச்சியில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிலையான பொதுசந்தை கட்டடத்தொகுதி

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதியில் தீயினால் பாதிப்புக்குள்ளான கடைத்தொகுதிகள் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன.

தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணித்து 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொது சந்தை கட்டட தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்று சுகாதார போசாக்கு சுதேசிய மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட அனர்த்த மதிப்பட்டிற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தகவல்களின் அடிப்படையில், பாதிப்புக்கு உள்ளான 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றக்கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நவீன வசதிகளுடன் கூடிய தீயணைக்கும் பிரிவொன்றை 97 மில்லியன் ரூபா செலவில் செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related Posts