கிளிநொச்சியில் விடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர் விபரம் வெளியாகியுள்ள நிலையில், விடுபட்டவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி கல்வி வலய நிரந்தர நியமனத்திற்கான தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் விடுபட்டவர்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த பதிவு நடவடிக்கை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் விடுபட்ட 01-07-2013 இற்கு முன்னர் கிளிநொச்சி வலயப் பாடசாலைகளில் தொண்டராசிரியராகப் பணியாற்றத் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்களது பெயர் விபரங்களே இவ்வாறு பதிவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இவ்வாறு பெயர்ப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் சகல ஆவணங்களுடனும் வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இச் சந்தர்ப்பத்தைத் தவற விடுபவர்களுக்கு பிறிதொரு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பட்டியல் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றாத பலர் சில பாடசாலை அதிபர்களதும் அதிகாரிகளதும் மோசடியான உறுதிப்படுத்தல் கடிதங்களுடன் தொண்டர் ஆசிரியர்கள் என்று கூறி நிரந்தர நியமனம் பெறுவதற்காக முயன்று வருகின்றார்கள்.

இதனால் நீண்டகாலமாக பாடசாலைகளில் சேவையாற்றிய உண்மையான தொண்டர் ஆசிரியர்கள் பாதக்கப்படவுள்ளதாகவும் கூறிக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளின் அதிபர்கள் தமது உறவினர்களுக்கும் தமக்கு வேண்டிய சிலரையும் மோசடியான வகையில் தொண்டர் ஆசிரியர்கள் என்று கூறி சேவை உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts