கிளிநொச்சியில் வர்த்தகர்கள் கதவடைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் இன்று நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர்கள், இன்று கதவடைப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு ஊர்வலமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும், கந்தசுவாமி ஆலயம் வரை சென்றதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருடன் வர்த்தகர்களும் இணைந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts