இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது பிரதேச அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
ஏற்கனவே அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் பிரதேச அலுவலகத்தை கொண்டுள்ள மத்திய வங்கி தனது ஆறாவது அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகர் பிரதேசத்தில் திறந்துள்ளது.கிளிநொச்சி, வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரதேச அலுவலகத்தில் பிரதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள், வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அலுவலகம் திறப்பு விழாவில் பிரதி அமைச்சர்களான முனைவர் ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் பளிககார, மத்திய வங்கியின் உதவி ஆளுநர் ஆனந்த சில்வா,கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம், முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன்,மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் முகாமையாளர்கள், பிரதேச செயலாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.