கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்புறப் பாடசாலைகள் சிலவற்றிற்கு அண்மையில் போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

இதன்போது திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

சில மாணவர்கள் வகுப்பறையிலேயே போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றமையும் தெரியவந்துள்ளது.

கஞ்சா மற்றும் போதையை ஏற்படுத்தம் ஒரு வகையான பாக்கு போன்றவற்றின் பாவனையும் மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. திணைக்களங்களின் அதிகாரிகளும் இது தொடர்பாக மௌனமாகவே உள்ளனர்.

மாணவர்கள் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டால், பல்கலைக்கழ அனுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மாணவர்கள் இவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்” என உளநல மருத்துவர் ஜெயராஜா மேலும் குறிப்பிட்டார்.

Related Posts