கிளிநொச்சியில் விவசாய ,பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் சிரமதானத்தில் 3000 பேர் வரையில் பங்கேற்பு!

கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் மாபெரும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தச் சிரமதானப் பணியில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்களுடன், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் என சுமார் 3000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றனர்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தசாமி, விவசாயபீடப் பீடாதிபதி பேராசிரியர் மிகுந்தன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் என இன்னும் பலர் இந்தச் சிரமதானப் பணியில் பங்கேற்று, கிளிநொச்சி மாவட்டத்தில் அமையவிருக்கும் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பதற்கான மக்கள் பங்கேற்பை உற்சாகமூட்டினர்.

இங்கு அமையவிருக்கும் தமது விவசாயபீடத்துக்கான பணிகளில் நேரடியாகப் பங்கேற்கவேண்டும் என்ற உணர்வுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட மாணவர்கள் பலர் இந்தச் சிரமதானத்தில் பங்கெடுத்திருந்தனர். யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து விசேட பஸ் மூலம் கிளிநொச்சிக்கு வந்திருந்த இவர்கள் உணர்வுடன் சிரமதானத்தில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்.

இலங்கையின் தமிழ்ப் பகுதியொன்றில் அமையவிருக்கும் முதலாவது பொறியியல் பீடம் என்ற உற்சாகத்துடன், இலங்கை பொறியியலாளர் ஒன்றியத்தைச் சேர்ந்த பல பொறியியலாளர்கள், பொறியியலாளர்களான இரணைமடு குடிநீர் திட்டத்தின் பணிப்பாளர் பாரதிதாசன், நீர்ப்பாசனத் திணைக்கள வட மாகாண உதவித் திட்டப் பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட பலருடன் சிரமதானத்தில் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன்,மொறட்டுவ, பேராதனை, றுகுணு ஆகிய பல்கலைக்கழகப் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், மாணவர்கள் பலரும் சிரமமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

“இது எங்களுடைய பகுதியில் அமையவிருக்கும் பல்கலைக்கழகம். இதனை வளப்படுத்திப் பலப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரதும் கடமை” என்று, சிரமதானத்தில் பங்கேற்றிருந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

“எங்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நாளைக்குப் படிக்கப்போற இடம். இதைத் துப்பரவாக்கிறது எங்கடை கடமைதானே? அதுதான் நாம் இந்தச் சிரமதானத்தில் பங்கேற்றுள்ளோம்” என்று, சிரமதான நிகழ்வில் பங்கேற்றிருந்த கண்டாவளை, தர்மபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வயது முதிர்ந்த பல ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் ஆரம்பம் முதலே குடிதண்ணீர்ப் போத்தல்களும், குளிர்பானங்களும், பணிசும் வழங்கி அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கான மலசலகூட வசதிகள் பல்கலைக்கழக நிர்வாகபீடம் அமையவிருக்கும் கட்டடத்தில் தேவையான நீர் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிரமதானப் பணிகளின் முடிவில், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் பங்கயற்செல்வன் தலைமையில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி கல்வி வலய நிர்வாகப் பிரிவுக் கல்விப் பணிப்பாளர் இருதயராஜ் ஆகியோர், சிரமதானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், கிளிநொச்சி மாவட்டமே திரண்டு வந்து அமையவிருக்கும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு வழங்கியிருக்கும் வரவேற்புக்கு மதிப்பளித்து கூடிய விரையில் இந்த வளாகங்கள் கிளிநொச்சியில் இயங்கச் செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கினர்.

நிறைவாக, சிரமதானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மதியபோசனம் வழங்கப்பட்டது.

-Source: Sikaram.lk –

Related Posts