கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மோசடியான பெயர்ப்பலகை
“கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லிம் மாணவர்களும் கற்று வருகின்றனர்.
இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்றுவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் – இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்.
உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்.உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.