கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சுற்றாடல் பிரச்சனைகள் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முறையாக திட்டமிடப்படாத திண்மக்கழிவு அகற்றல் நடைமுறைகள் மாவட்டத்தில் இருப்பதுடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களின்றி பல்வேறு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் பல்வேறு இடங்களில் உவர்நீர்த்தடுப்பு அணைகள் இல்லாததால் உவர்நீர் உட்புகும் ஆபத்துள்ளது. சட்டவிரோத காடழிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, பூநகரி பிரதேசத்தில் காணப்படும் மணல் திட்டுக்களின் திட்டமிடப்படாத பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு சுற்றாடல் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுத்தல், ஆரம்ப பாடசாலைகளில் சுற்றாடல் சிறுவர் கழகங்களை உருவாக்குதல், வர்த்தமானிப்படுத்தப்பட்ட சகல தொழிற்சாலைகளுக்கும் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை வழங்குதல், சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டங்களை வலுவூட்டுதல், சுற்றாடல் சட்டத்தை அமுல்படுத்துதல், மாவட்டத்தில் முறையான திண்மக்கழிவகற்றலை அமுல்படுத்துதல், பல்வேறு இடங்களில் இலத்திரனியல் கழிவு கொள்கலன்களை நிறுவுதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.