கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு அங்கமான நெற் களஞ்சியங்கள், நெல் உலரவிடும் தளங்கள் போன்ற கட்டுமானங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள இராமநாதபுரம், பன்னங்கன்டி பகுதிகளில் தலா ஏழு கமக்கார அமைப்புக்களுக்கென அமைக்கப்பட்ட நெற் களஞ்சியங்களே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், மாகாண நீர்ப்பாசனத்திணைக்கள பணிப்பாளர் மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு நெற்களஞ்சியங்களை திறந்து வைத்தனர்.
இதில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பெரும்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.