கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய குறித்த மாணவி நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் கிணற்றில் மாணவி பாய்ந்த சத்தத்தை அறிந்த அயலவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் குறித்த மாணவி, கடந்த சனிக்கிழமை காலையில் பாடசாலை விடுமுறை தினத்தில் மேலதிக வகுப்பிற்குச் சென்றுள்ளார். இதன்போது, மேலதிக வகுப்பு நிறைவுற்றதும் ஏனைய மாணவர்களை அனுப்பிவிட்டு குறித்த மாணவியை வகுப்பறையில் இருக்குமாறு தெரிவித்து ஆசிரியர் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனைக் குறித்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர் பாடசாலை அதிபர், கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் மாணவியின் எதிர்காலம் கருதி பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. இது தொடர்பில் கல்வித் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது
இந்த நிலையில் நேற்றைய தினம் மாணவி தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற வேளையில் அங்கு சில மாணவிகள் கதைத்ததாக அறிந்து மனமுடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அதன் பின் சிறிது நேரத்தில் கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
இருப்பினும் அயலவர்களின் உதவியுடன் மாணவி காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் குறித்த மாணவியின் தற்கொலை முயற்சிக்கு ஆசிரியரின் செயலே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.